சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா நேற்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வு குறித்து இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் எனக்கு ஓவர்வெல்மிங்னால (overwhelming) பேச்சு வரவில்லை. ஒவ்வொரு ஜாயினால  சரியாகப் பேச முடியவில்லை. 

Advertisment

உள்ளத்தில் நினைப்பதெல்லாம் வெளியிலே வார்த்தையாக வருவது என்பது அந்தந்த நேரத்தைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும் அமைவது ஆகும். இவ்வாறு அமைகின்றதுதான் ஒவ்வொரு நேரத்திலும். ஆனால் நேற்று என்னவோ எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு என முனைப்பெடுத்து எல்லோரும், அரசு சார்ந்த எல்லா அமைச்சர்களும் எல்லா சீஃப் செக்ரட்டரியில் இருந்து அவ்வளவு பேரும் அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றது என்னால் நம்ப முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத்தான் எனக்கு ஓவர் வெல்மிங்.

இதனால் தான் அங்கு எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை. நான் கூட முதல்வரைக் கேட்டேன் எதற்காக இதை பண்றீங்க அப்படியென்று. அதனைப் பல பேர் பல விதமாக நினைக்கலாம். அதற்கு என்ன காரணம் என்றால் இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன். நான் அமைத்த இசையாகக் கூட இருக்கலாம். அது வேறு சமாச்சாரம் . அதை அவர் தான் சொல்ல முடியும். நான் இதையெல்லாம் எதிர்பார்க்கிறவன் அல்ல. அப்படிப்பட்ட ஒருவனுக்குப் பாராட்டு விழா நடத்துவது என்பது இந்த சிம்பொனியின் சிகரம் தொட்டதால் தான் அவர் அந்த பாராட்டு விழாவை, மிகவும் மிகவும் முக்கியமாகக் கருதி இருக்கிறார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. ஒரு உலக சாதனை படைத்த ஒரு தமிழனைப் பாராட்டுவது என்பது தமிழக அரசின் கடமை என்று அவர் கருதி இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.