இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றினார். ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் உலகின் தலைசிறந்த ஆர்கெஸ்ட்ரா குழுக்களில் ஒன்றான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவை வைத்து அரங்கேற்றினார். 

Advertisment

இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்​தார். இதையொட்டி பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Advertisment

மேலும் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் எடுத்தது. இந்த விழா அவரின் 50 ஆண்டு கால சினிமா பயணம் தொடர்பாகவும் எடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பம்சமாக அவர் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசை அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவால் அரங்கேற்றப்பட்டது. மேலும் இதை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்ற ஆசையை முதல்வர் ஸ்டாலினிடம் இளையராஜா தெரிவித்திருந்தார். அதற்கும் முதல்வரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இதனால் அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதனிடையே இளையராஜா லண்டனைத் தொடர்ந்து துபாயில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். பின்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டாவது சிம்பொனியை எழுதத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்ஸர்ஸ் என்ற இசைக் கோர்வையையும் எழுதுவதாக தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் இளையராஜா தனது இரண்டாவது சிம்பொனி குறித்த அடுத்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிப்ரவரி 03, 2026 அன்று நான் இந்த புதிய ஸ்டுடியோவிற்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது. மேலும் எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இளையராஜா தனது முதல் சிம்பொனியை 35 நாட்களில் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.