சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டியூட் படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருவதாக வாதிட்டிருந்தார். இதைக்கேட்ட நீதிபதி இது தொடர்பாக இளையராஜா தனியாக வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தார். 

Advertisment

அதன்படி இளையராஜா தற்போது டியூட் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “படத்தில் தனது அனுமதியின்றி ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ ஆகிய பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். அந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‘பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இளையராஜா அனுமதி இல்லாமல் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை தங்களிடம் உள்ளது. எக்கோ நிறுவனம், தங்கள் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இதையடுத்து ‘டியூட்’ பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்று, பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நீதிபதி, ‘பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்’ என நீதிபதி குறிப்பிட்டு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.