இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பெயரை அனுமதி இல்லாமல் சமூக வலைதளங்கள், சில தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தொடுத்த மனுவில், ‘தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், குரல், இசைஞானி என்ற பட்டப் பெயர் ஆகியவைகளை ஃபேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர் பயன்படுத்துகின்றனர். அவை அத்தனையும் நீக்க வேண்டும். அதேபோல் சில சோனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தன்னுடைய புகைப்படம் உள்ளிட்ட்வைகளை வணிக நோக்கில் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றது. அந்த வருமான விவரங்களை அவர்கள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘இளையராஜா புகைப்படத்தை ஏஐ-யால் மார்பிங் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்’ என தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதி, பெயர், புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள், ‘புகைப்படத்தை பயன்படுத்தலாம் ஆனால் அவர்கள் வணிக நோக்கில் பயன்படுத்துகிறார்கள். மேலும் அவதூறு பரப்பும் வகையிலும் பயன்படுத்துகிறார்கள்’ என்று கூறினர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இளையராஜாவின் புகைப்படம், குரல், பெயர் உள்ளிட்ட அனைத்தையும் அவருடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் சோனி உள்ளிட்ட சில இசை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
Follow Us