சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கும் இன்று நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தற்போது வெளியாகியிருக்கும் டியூட் படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து சோனி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோனி நிறுவனம் ஈட்டிய வருமானத்தை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார். மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தயாராக உள்ளதாகவும் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசை அமைப்புகளின் பதிப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதி மன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றக் கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு இளையராஜா பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டியூட் படத்தில் பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா தனியாக வழக்கு தொடரலாம் என தெரிவித்தார். மேலும் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
பிரதீப் ரங்கந்தான், மமிதா பைஜூ நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான டியூட் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘கருத்த மச்சான்’(புது நெல்லு புது நாத்து) பாடல் பயன்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.