விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. மேலும் அரசியலிலும் விஜய் பிரவேசிக்க தொடங்கியிருப்பதால், அரசியல் வட்டாரத்திலும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் வெளியிடப்படவில்லை. காரணம், இப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்பது தான்.
சில நாட்களுக்கு முன்பாக இப்படத்திற்கான தணிக்கை சான்று பெற வேண்டி படக்குழு, உயர்நீதி மன்றத்தை நாடியது. இந்த வழக்கில் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டு என்று நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் தணிக்கை வாரியம், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. இதன் காரணமாக இப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, படக்குழு சான்று வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.இந்த வழக்கில் படக்குழுவின் வாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இந்த வாதங்களை உயர்நீதிமன்றத்திலேயே முன் வைக்கும் படிக் கூறி, இந்த மனுவினை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், இன்று உயர்நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். தணிக்கை வரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். இந்த விசாரணையில் நீதிபதிகள் படத்தை யார் பார்த்தது? படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு தங்கள் தரப்பு நியாயங்களை தணிக்கை வாரியம் முன்வைத்தது. அந்த வகையில், “கடந்த 6ம் தேதி வழக்கு தொடரும் போதே, படம் மறு ஆய்விற்கு அனுப்பட்டுள்ள தகவல் படக்குழுவிற்கு தெரியும். இருப்பினும், அவர்கள் அதனை எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் படத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தோம். இதையடுத்து, அந்த 14 காட்சிகளை நீக்கி விட்டதாகவும் தற்போது தணிக்கை சான்று வழங்க வேண்டும் எனவும் படக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தலைவர் தான் முடிவெடுப்பார். மேலும், மண்டலக் குழு தான் படத்தை பார்த்து தணிக்கை சான்றை பரிந்துரை செய்யும். இருப்பினும் இறுதி முடிவை தலைவர் தான் உறுதி செய்ய முடியும். எனவே, மண்டலக் குழுவின் அறிக்கை தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது” என்று தணிக்கை வாரியம் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், “சினிமோட்டோகிராபியின் சட்டப்படி 72 நிமிடங்களுக்கு அதிகமான நீளமுடைய படமாக இருந்தால், அதற்கு சான்று வழங்குவது தொடர்பாக தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். இந்த நிலையில், இப்படம் மறு ஆய்வுக்கு அனுப்பட்டிருக்கும் நிலையில், முடிவெடுக்க போதிய கால அவகாசம் தனி நீதிபதி வழங்கவில்லை. அதே வேளையில் படம் வெளியீட்டு தேதி அறிவித்துவிட்டதாலும், 500 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதாலும் உடனடி நிவாரணம் வழங்கிட முடியாது. படக்குழு வழக்கு தொடராமல் இருந்தால் படம் தற்போது மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும்” என்ற வாதங்களையும் தணிக்கை வாரியம் முன் வைத்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/20/19-54-2026-01-20-15-40-40.jpg)