மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படத்தை பாராட்டி ‘இயக்குநர் திலகம்’ என்ற பட்டத்தையும் மாரி செல்வராஜுக்கு வழங்கியிருந்தார். தொடர்ந்து துறை வைகோவும் படத்திற்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்செல் மேத்தா, இப்படத்தை பாராட்டியுள்ளார். அவரது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்ததாவது, “ஸ்போர்ட்ஸ் பயோபிக் என்ற ஜானர் மூலம் சாதி - அடையாளம், வன்முறை - பழிவாங்கல், வெறுப்பு - பாகுபாடு, அடிமைத்தனம் - சுதந்திரம் ஆகியவற்றின் முரண்களுக்கு எதிராக மாரி செல்வராஜ் ஒரு சிறந்த படத்தை மன உறுதியுடன் உருவாக்கியுள்ளார். இந்த படம் அற்புதமான ஒளிப்பதிவு, சிறந்த ஆக்ஷன் காட்சிகள், சிறப்பான கபடி காட்சிகள் ஆகியவற்றை வழங்குகிறது.
இசையும் படத்துக்கு பக்க பலமாக இருக்கிறது. உள்ளூர் கபடி காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இசை சிறப்பான ஒன்று. படத்தின் எடிட்டிங் கூர்மையாக செய்யப்பட்டுள்ளது. அது துணிச்சலுடன் கூடிய கதை சொல்லலில் டென்ஷன், ட்ராமா, எமோஷனல் ஆகியவற்றை அழகாக உருவாக்குகிறது. துருவ் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். அவரது உடல் உழைப்பை தாண்டிய ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். அவரது உடல் மொழி, கோபம், காயம், பாதிப்பு அனைத்தும் அவரது வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறது. எனக்கு பரிச்சயம் இல்லாத பல நடிகர்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளார்கள். சிறந்த நடிகர்கள் தேர்வு.
எனது ஒரே குறை ஒரே மாதிரியான இந்தி கதாபாத்திரங்கள் வருவதுதான். அடுத்த முறை அது வராமல் இருக்க நானே முன்வந்து உதவ விரும்புகிறேன். இந்த அற்புதமான அனுபவத்தை உருவாக்கிய அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சமீர் நாயர், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். பைசன் பெரிய ஸ்கிரீனில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது வெற்றி பெற்றுவிட்டது. படத்தை போய் பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us