பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து வருடங்களாக கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்வு நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி உள்ளிட்ட மேடை ஏற்ற தவறிய கலைகளை கௌரவிக்கும் விதமாக அரங்கேற்றப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 6ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது. இன்று மற்றும் நாளை என சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இந்த விழா நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் பறையடித்து விழாவை தொடங்கி வைத்தனர். பின்பு விழா குறித்து மேடையில் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையம் நடத்தி கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் வளர்ந்து கொண்டே போகிறது. நான் மூன்று வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் கூப்பிடும் போது நான் கண்டிப்பாக இங்கு இருக்க வேண்டும் என்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறேன். இசை என்பது அனைவருக்கும் பொதுவானது. அது எவ்வளவு முக்கியம் என்பது நீலம் பண்பாட்டு மையத்திற்கும் தெரியும். கண்டிப்பாக இது அடுத்த அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். அதற்கு என்னுடைய சப்போர்ட்டும் கண்டிப்பாக இருக்கும்.
அதேபோல் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மூலமாகத்தான் தெருக்குரல் அறிவை தெரியும். அவருடைய முதல் பாடலை நான் வெளியிட்டேன். அவரைப் போல் நிறைய சுதந்திரமான இசைக்கலைஞர்கள் இந்த மேடையில் இருந்து வருகிறார்கள். அதனால் இந்த மேடை ரொம்ப முக்கியமானது. எல்லாருமே இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கலைஞர்களை ஊக்குவிப்பதில் நீலம் பண்பாட்டு மையம் போன்ற சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக சுயாதீன கலைஞர்களை ஆதரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்குமே கலைஞர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/19-49-2025-12-27-11-20-55.jpg)