தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக நுழைந்து பின்னாளில் முன்னணி நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையால் மட்டுமல்லாமல் தனது நடிப்புத்திறன் மூலமாகவும் திரை ரசிகர்களை கவர்ந்த பிரகாஷ்குமார், முகம் தெரியாத நபர் ஒருவரால் ஏமாற்றப்பட்டுள்ளார் என்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சினிமா மட்டுமல்லாமல் சமூக அக்கறைக் கொண்ட நபராகவும் இருந்து வருகிறார். அதனால், தன்னால் முடிந்த உதவிகளை மாணவர்கள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் எக்ஸ் தள கணக்கிற்கு உதவி கேட்டு பதிவு ஒன்று வந்துள்ளது. அந்தப் பதிவில் " எனது தந்தை சிறுவயதிலேயே காலமாகிவிட்டார், என் அம்மா தான் வேலைக்குச் சென்று எங்களை படிக்க வைத்தார், தற்போது என் அம்மாவும் இறந்துவிட்டார், அவரின் இறுதி சடங்குகளை நடத்தக் கூட பணமில்லாமல் நானும் எனது தங்கையும் தவித்துவருகிறோம், எனவே உங்களால் முடிந்த பண உதவி செய்யுங்கள்" என்ற அந்த பதிவைப் பார்த்து பரிதாபப்பட்ட பிரகாஷ் குமார், அவருக்கு 20000 ரூபாயை அனுப்பியுள்ளார். மேலும் இந்த பணம் அனுப்பிய விவரத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதைப்பார்த்து பலரும் அந்த நபருக்கு பணம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் "எனது அம்மா இறந்துவிட்டார்" என்ற அந்த பதிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வந்தது எனவும், அதன் வீடியோ யூ-டுயூப் ல் உள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow Us