பல்வேறு நாடுகளில் பிரபல ரியாலிட்டி ஷோவாக இருக்கும் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சி இந்தியாவில் ‘பிக் பாஸ்’ என்ற பெயரில் நடந்து வருகிறது. இங்கு இந்தியில் முதலில் தொடங்கி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் கடந்த மாதம் 28ஆம் தேதி ஆரம்பித்தது. இதனை கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 19 போட்டியாளர்கள் விளையாண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி பெங்களூருக்கு அருகே உள்ள பிடாடி ஹோப்ளியில் ஜாலி வுட் ஸ்டுடியோஸில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டிஸ் அனுப்பியது. அதாவது சுத்தரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கும் செட்டை இழுத்து மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செட் அமைக்கப்பட்டதற்கு முறையான அனுமதி பெறாமல் இருந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை மீறப்பட்டதற்காக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெற்று வேறொரு செட் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடரப்படுமா எனவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.