தமிழ் சினிமாவில் சமூக நீதி, சமத்துவம் என முற்போக்கு கருத்துக்களை தன் படம் மூலம் சொல்லி வந்தவர் இயக்குநர் வி. சேகர். கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 1990ஆம் ஆண்டு நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா நடிப்பில் வெளியான ‘நீங்களும் ஹீரோதான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்பு ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ என 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ ஆகிய குடும்ப படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
இதனிடையே ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ மற்றும் ‘வீட்டுக்கு வீடு’ என இரண்டு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இயக்குவதைத் தாண்டி பள்ளிக்கூடம் மற்றும் எந்த ராசி நல்ல ராசி ஆகிய இரண்டு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவுக் காரணமாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சேகரின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவர் படத்தில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார். மேலும் சேகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Follow Us