பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் ஈரானிய அணியை 75 - 21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இதனால் கார்த்திகாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
அந்த வகையில் இயக்குநர் கோபி நயினார், தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம், கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்த்திகா குறித்து இரண்டு பதிவுகளை பகிர்ந்துள்ள அவர் முதல் பதிவில், “விடுதலையின் பெருமை நம் மகள் கார்த்திகா, நீ ஆடும்போது அடக்கிய மூச்சில் நாங்கள் விடுதலையின் நம்பிக்கையை சுவாசிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் “எங்களை இருட்டிலேயே வைத்திருங்கள், இருப்பினும் இந்த தேசத்தின் ஒளி விளக்காய் நாங்கள் இருப்போம்.
உங்கள் நவீன நகரத் திட்டங்கள் எங்களை கண்ணகி நகருக்கு துரத்தியது இன்று நீங்கள் எங்களை பார்க்க கண்ணகி நகருக்கு வருகிறீர்கள். எப்போதும் நீங்கள் எங்களுக்கு பெருமை சேர்த்தது இல்லை, நாங்கள் தான் எப்போதும் உங்களுக்கு பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் உருவாக்கிய சிங்கார சென்னையில் எங்களைப் போன்றோர்(கார்த்திகா) ஒருவர் கூட இல்லை. நீங்கள் பேசிப் பேசி அதிகாரம் பெற்ற எங்கள் நிலத்தில் உங்கள் சிங்கார சென்னையில் திராவிட அடையாளத்தோடு யாரும் இல்லை. அடையாள அழிப்பு மண்ணின் கொள்கைக்கு எதிரானது. எங்களை இருட்டிலேயே வைத்திருங்கள் என்றாவது ஒரு நாள் இந்த அதிகாரம் அதிரும்படி எரிமலையாய் வெடிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us