தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அறம் பட இயக்குநர் கோபி நயினார், இந்த் விருது தொடர்பாக அரசை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன்! உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும். உரிமை கோருபவர்களை தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் இயக்கிய அறம் படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us