சமூக வலைதளங்களில் கடந்து சில தினங்களாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மராத்தி நடிகை கிரிஜா ஓக். இவர் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் கவனம் செலுத்தி வருபவர். 2007ஆம் ஆண்டு ஆமிர் கான் நடிப்பில் வெளியான ‘தாரே ஜமீன் பர்’ மற்றும் 2010ஆம் ஆண்டு துஷார் கபூர் நடிப்பில் வெளியான ‘ஷோர் இன் தி சிட்டி ஆகிய’ படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. பின்பு அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் 2023ஆம் ஆண்டு வெளியான ஜவான் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தை தவிர்த்து வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து அவர் நடிப்பில் கவனம் செலுத்த சமீபத்திய ஒரு பேட்டியில் தனது மாணவ பருவத்தையும் நடிகர் குல்சன் தேவையாவுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். மாணவ பருவத்தில் அவரது ஆசிரியர் கூறிய பேப்ஸ் என்ற வார்த்தை வேடிக்கையாக மாறியதாகவும் குல்சன் தேவையாவுடன் நடித்த போது அவர் அக்கறையுடன் நடந்து கொண்டதாகவும் அவர் விவரித்த உடல் மொழி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் அவரது உடையும் கவனம் பெற்றது. இதையடுத்து ரசிகர்களின் விருப்ப நாயகி பட்டியலில் கிரிஜா ஓக் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து கிரிஜா ஓக் குறித்தான தேடல்கள் அதிகரிக்க அதே சமயம் இவர் புகைப்படங்களை வைத்து மார்ஃபிங் செய்யப்பட்ட சில ஆபாச புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த ஆபாச புகைப்படங்கள் குறித்து தற்போது கிரிஜா ஓக் கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் “கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடப்பது பைத்தியக்காரத்தனமானது. எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது, ஆனால் அதே சமயம் மோசமான விஷயங்களும் நடக்கிறது. எனது புகைப்படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்படுகிறது. இதில் என்ன தொந்தரவு என்றால் இதற்கு ஒரு எல்லையே இல்லை.
எனக்கு 12 வயது மகன் இருக்கிறான். அவன் இப்போது சமூக வலைதளத்தில் இல்லை. ஆனால் வளர்ந்த பிறகு பயன்படுத்துவான். அப்போது இந்த புகைப்படங்களை பார்த்தால் அவன் எப்படி உணர்வான். அதை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவனுக்கு தெரியும் இது ஏஐ-யால் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று. ஆனால் அது அவனுக்கு ஒரு மலிவான எண்ணத்தை உருவாக்கும். அதனால் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் ஒருவருடைய புகைப்படத்தை தவறாக சித்தரிக்கும் முன்பு கொஞ்சம் யோசியுங்கள். அதே போல் அப்படி சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை ரசிப்பவராக நீங்கள் இருந்தால் நீங்களும் இந்த பிரச்சனைக்கு ஒரு காரணமானவர் தான். அதனால் நீங்களும் யோசிங்கள்” எனப் பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/14/08-10-2025-11-14-17-42-52.jpg)