சமீப காலமாக தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை பயன்படுத்தும் ட்ரெண்ட் அதிகமாகி வருகிறது. இதில் இளையராஜா பாடல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 21ஆம் தேதி வெளியான மாஸ்க் படத்தில் கூட இளையராஜாவின் 6 பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சில படங்களில் இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் பாடல்கள் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் சம்பந்தப்பட்ட படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. இதைத் தவிர்த்து இசை நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு தொடரப்பட்டு அதுவும் நடந்து கொண்டு வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் காப்புரிமை விவகாரம் தொடர்பாக இளையராஜா தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒரு பாடலின் ஒரிஜினலை அப்படியே பயன்படுத்தும் போது அது காப்புரிமையில் வரும். சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரிடம் பயன்படுத்துபவர்கள் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இளையராஜாவிடம் அனுமதி கேட்டால் அவர் கொடுத்து விடுவார். ஆனால் கேட்காமல் பயன்படுத்தும் போதுதான் அது பிரச்சினையாக மாறுகிறது. 

Advertisment

ஒரு பாடலுக்கான காப்புரிமையை அந்த இசையமைப்பாளர்தான் வைத்திருப்பார். அந்தப் பாடலில் சிறிய பகுதியை மட்டும் பயன்படுத்தினால் காப்புரிமை தேவையில்லை. ஆனால் முழு பாடலை பயன்படுத்தும் போது அது காப்புரிமையில் வந்துவிடும்” என்றார்.