பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜன நாயகன் படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்ற அடையாளத்தோடு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்தது.

Advertisment

ஆனால், ஜன நாயகன் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்தது. இதனால் ஜன நாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இருதரப்பு வாதங்களையும் கேட்டார். மேலும், தணிக்கை வாரியத்துக்கு பல்வேறு கேள்விகளை அடுக்கி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

Advertisment

அதன்படி, ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆஷா இன்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். மேலும், ஜன நாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்தார். இந்த தீர்ப்பின் மூலம் விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், ஜன நாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

ஜன நாயகன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (10-01-26) வெளியாகவுள்ள பராசக்தி படத்திற்கு தற்போது வரை தணிக்கை சான்று வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் 10ற்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என தனிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அந்த நீக்கங்களைப் படக்குழுவினர் தற்போது வரை செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் தனிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளதாகத் தணிக்கை வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை பராசக்தி படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Advertisment