தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. இவர் தமிழ் மற்றும் மலையாளத்திலும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஓய்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பின்பு அசோக் செல்வன் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தார்.
இப்போது அவர் தெலுங்கில் புதிதாக நடித்துள்ள படம் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி’. இப்படம் மலையாள வெற்றி படமான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் இயக்குநர் தருண் பாஸ்கர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகத் தான் ஈஷா ரெப்பா நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் ஈஷா ரெப்பா. அப்போது அவரிடம் சமீப காலமாக உலா வந்த அவரது திருமண தகவல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது அவரும் இயக்குநர் தருண் பாஸ்கரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக பதில் அளித்த அவர், “அந்த வதந்திகளை நானும் கேள்வி பட்டேன், அது சம்பந்தமாக ஒரு கிண்டலான ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும் நான் பதிவிட்டேன்” என்றார். மேலும், “உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எதையும் உங்களால் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும். அதை நான் நம்புகிறேன். அதனால் அதற்கு நான் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமானது ஏதாவது நடந்தால், அதை நானே அறிவிப்பேன்” என்றார்.
Follow Us