செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜானு சாந்தர் இசையமைத்துள்ள இப்படம் 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படும் இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஒருவழியாக வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய துல்கர் சல்மான், “என்னுடைய வாழ்க்கையில் ஒரு படத்திற்காக இந்தளவு ஸ்கிரிப்ட் மீட்டிங் செய்தது கிடையாது. ஒவ்வொரு மீட்டிங்கும் குறைந்தது 5மணி நேரத்திற்கு கீழ் நடக்காது. மொத்தம் பத்திலிருந்து 12 மீட்டிங் வரை நடந்திருக்கும். இந்த காலகட்டத்தில் 8-லிருந்து 10 படங்கள் நான் கமிட் செய்திருக்கலாம்.
இந்த படம் வழக்கமாக இருக்கும் ஒரு கதை அல்ல. இந்த படத்திற்கு என ஒரு இலக்கு இருக்கிறது. அதனால் படம் தான் எல்லாத்தையும் முடிவு செய்யும். அதாவது படத்தில் யார் நடிக்க வேண்டும், எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும், எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என எல்லாமே படம்தான் முடிவு செய்தது. கடைசி நிமிடம் வரை அது தொடர்ந்தது. இந்த பட ஷுட்டிங் தள்ளிக் கொண்டே போனபோது இந்தப் படம் வேறு ஒரு ஹீரோவுக்கு போய் விடுமோ என பயந்தேன். ஏனென்றால் இந்த படம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். அதேசமயம் இயக்குநரை நினைத்தும் பயப்பட்டேன். அவர் 5 வருஷமாக இந்த படத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார். அவரது எதிர்காலம் பாதிக்க கூடாதுன்னும் பயப்பட்டேன்” என்றார்.
Follow Us