துல்கர் சல்மான் நடிப்பதை தாண்டி ‘வேஃபாரர் பிலிம்ஸ்’ என்றும் பேனரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த பேனரில் சமீபத்தில் வெளியான ‘லோகா’ படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் மலையாள திரைத்துறையில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த நிறுவனத்தின் பெயரை அதில் பணிபுரியும் நபர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. நிறுவனத்தில் தலைமை இணை இயக்குனராக இருந்த தினில் பாபு ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அந்த பெண் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

Advertisment

அந்த பெண் குடுத்த புகாரில், “நிறுவனம் சார்பில் புதுப் படம் ஒன்று தொடங்கவிருப்பதாக தினில் பாபு ஃபோன் மூலம் கூறினார். பின்பு பனம்பில்லி நகரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் சென்றதும் ஒரு அறைக்குள் என்னை அழைத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த நேரத்தில் என் கணவர் அங்கு வந்ததால் நான் தப்பித்தேன்” என்றுள்ளார். மேலும் தினில் பாபு தனக்கு இனிமேல் சினிமா வாய்ப்பு கிடைக்காதபடி செய்வேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அதனை காவல் துறையில் ஆதாரமாகவும் சமர்பித்துள்ளார். 

Advertisment

பெண்ணின் புகார் தொடர்பாக தினில் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமும் தினில் பாபு மீது எர்ணாகுளம் காவல் நிலையத்திலும் கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பிலும் புகார் கொடுத்துள்ளது. மேலும் அவருக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து முறையான அறிவிப்பு வருவதை மட்டும் நம்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.