நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் பயணிக்கும் துல்கர் சல்மான், கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து ‘காந்தா’ மற்றும் ‘ஆகாசம் லோ ஓகா தாரா’ ஆகிய படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இன்னும் தலைப்பிடப்படாத அவரது 41வது படத்தை வைத்துள்ளார்.
இதனிடையே காந்தா என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்து லோகா பட வெற்றியால் தள்ளிப்போனது. இப்போது வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ், ராணா டகுபதி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இவர் நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸை இயக்கியவர். இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஜானு சாந்தர் இசையமைக்கிறார்.
1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் இத்திரைப்படம் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படும் இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரில், சமுத்திரகனி குருவாகவும் துல்கர் சல்மான் அவரது சிஷ்யனாகவும் வருகிறார். இவர்களது கூட்டணியில் சாந்தா என்று ஒரு படம் தொடங்கப்பட அது சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இருவரும் ஈகோவால் பிரிந்து செல்ல துல்கர் சல்மான் கைவிட்ட படத்தை காந்தா என்ற தலைப்பில் உருவாக்குகிறார். இது குருவான சமுத்திரக்கனிக்கு எதிராக அமைய அவர் படத்தை நிறுத்த சில சதி திட்டம் தீட்டுவது போல் தெரிகிறது. ஆனால் துல்கர் சல்மான் படத்தை எடுத்தே தீருவேன் என எடுத்து வருகிறார். இருப்பினும் சிலசரிவுகளை சந்திக்கிறார். அந்த சமயத்தில் ‘ஊதித்தள்ள நான் ஒன்னும் மண் இல்ல... ,மலை’ என சவால் விட்டு வேலையை தொடர்கிறார்.
சமுத்திரக்கனிக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே நடக்கும் ஈகோ கிளாஷில் யார் வெற்றி பெற்றார். காந்தா படம் நல்லபடியாக எடுக்கப்பட்டு ரிலீசானதா என்பதை காதல் ஆக்சன் எமோஷன் ஆகியவை கலந்து விறுவிறுப்புடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் கதை எனவும் கூறப்படுகிறது.
Follow Us