மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. இப்படத்தில் இளையராஜாவின் ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி அதை நீக்க இளையராஜா டியூட் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிபதி செந்தில்குமார் படத்தில் இளையராஜா பாடல்களை உருமாற்றி பயன்படுத்தியற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தும் பாடல்களை நீக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்த படத் தயாரிப்பு நிறுவனம் ஏழு நாள் அவகாசம் கேட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். மேலும் மனு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு தரப்புக்கும் தற்போது சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை முடித்து வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு இளையராஜா தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
Follow Us