பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்திருக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை(17.10.2025) வெளியாகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக படக்குழு புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் சிறந்த அனுபவத்தை அனுபவிக்க திரையரங்க உரிமையாளர்களுக்கு படக்குழு ஒரு கோரிக்கை வைத்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டியூட் படத்தை உங்களுக்கு கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை உறுதிசெய்ய, அனைத்து திரையிடல்களுக்கும் ஆடியோவின் லெவலை குறைந்தபட்சம் 5.5-ல் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் முழு தாக்கம் வெளிப்படும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்” என்றார்.
கடந்த வருடம் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா படம் சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து திரையரங்குகளில் சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்த முடிவை படம் வெளியான சில நாட்களே கழித்து படக்குழு எடுத்தனர். ஆனால் எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முழுமையான சினிமா அனுபவத்தை பெற டியூட் படக்குழு முன்னதாகவே அறிவிக்க முடிவெடுத்து தற்போது அறிவித்தியுள்ளது.