பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுனர். அந்த வகையில் படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசுகையில், “மக்கள் இந்த படத்தை ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு சாட்சி படம் இதுவரை 95 கோடி வசூல் செஞ்சிருக்கு. நாளைக்கு 100 கோடி அடிச்சிடும். அதுக்கு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்குறேன்.
இந்த படம் நிறைய விவாதத்தை உருவாக்கியிருக்குன்னும் சொல்லாத விஷயத்தை சொல்லிருக்குன்னும் பேசுறாங்க. இது தமிழ்நாட்டுல புதுசு இல்ல. ஏன்னா இங்க நிறைய பெரியவங்க இருந்திருக்காங்க. பெரியவருன்னும் ஒருத்தர் இருந்திருக்கார். அவங்கெல்லாம் நிறைய சொல்லிருக்காங்க. அவங்க வழியில தான் நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். அதை இன்னும் சினிமா மொழியில எந்தளவு எண்டர்டெயின்மெண்டா ஆடியன்ஸ் ஏத்துக்குற மாதிரி சொல்ல முடியுமோ அதை சொல்வோம். இது கண்டிப்பா என்னுடைய படங்களில் தொடரும்” என்றார்.