2016 ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மோகன்ஜி. அதன் பிறகு இவர் 2020-ம் ஆண்டு திரௌபதி என்னும் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வசனங்களையும் கொண்டிருந்ததாக மக்களிடையே பேசுபொருளாக மாறியது. இத்தகைய நிகழ்வால் இயக்குநர் மோகன்ஜியும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களையும் இயக்கி இருந்தார். இந்த படங்களும் மக்களிடையே பேசுபொருளாக மாறியதோடு, கலவையான விமர்சனங்களையும் பெற்றன.
அந்த வகையில் இவர், ஏற்கனவே இயக்கியிருந்த திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கியுள்ளார். இவரின் படங்கள் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம் தான். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தது. அதாவது பிரபல பாடகி சின்மயி இப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பிறகு இந்த படத்தில் நான் தெரியாமல் பாடிவிட்டேன் எனக்கூறி இந்தப் பாடலை பாடியதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த கருத்து திரைவட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை தற்போது தான் அமைதியான நிலையில், இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
மோகன் ஜியின் பிரியமான நாயகனான ரிச்சட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரக்ஷனா இந்துசூடன், முக்கிய கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 14 ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்டையாகக் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. இப்படம் வருகின்ற ஜனவரி 23 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பெரிய அளவில் இப்படம் வெற்றி பெரும் என இப்படத்தின் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Follow Us