திரைப் பிரபலங்கள் அவ்வப்போது எதாவது ஒரு சர்ச்சை அல்லது பிரச்சனையில் சிக்கி கொள்வது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மலையாள நடிகர் மீதான வழக்கு ஒன்றில் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்தி சினிமாத்துறை மட்டுமல்லாது தமிழ், கன்னட, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியிருந்தார். மேலும் விஜயின் குஷி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு எம்.ஜி. ரோடு அருகே சர்ச் தெருவில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான பாஸ்டியன் பப் என்ற கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த 11 தேதி இரவு தொழிலதிபரும், பிக்பாஸ் பங்கேற்பாளருமான சத்யா நாயுடு தனது நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது கட்டணம் செலுத்தும் போது சத்யாவிற்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக சத்யாவும் அவரது நண்பர்களும் ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறி கப்பன்பார்க் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, நேற்று (17-12-25) இந்த விடுதியில் மும்பையைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். வருமான வரி முறையாக செலுத்தப்படவில்லை என்ற காரணத்தினால் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியின் வருவாய் மற்றும் செலுத்திய வருமான வரிகள் குறித்த விவரங்களை வருமான வரித்துறையினர் கேட்டறிந்தனர். மேலும் பலமணி நேர சோதனைக்கு பிறகு சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் விசாரணைக்காக உடன் எடுத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஷில்பா ஷெட்டிக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/s-2025-12-18-12-08-51.jpeg)