குத்து படத்தின் மூலமாக தமிழ்த்திரையில் நன்கு அறியப்பட்டவர் நடிகை திவ்யா. இதையடுத்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் மக்களிடம் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பாக திரை வாழ்க்கையிலிருந்து விடைபெற்ற திவ்யா, அரசியலில் கால் பதித்தார். இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்த நிலையில் அவர் தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் (இன்ஸ்டா) பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தெருநாய்கள் குறித்து பொதுமக்களிடையே பெரும் சர்ச்சை உருவானது. அதில் சிலர் தெருநாய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதனால் நாய்களுக்கு உணவளிக்க கூடாது போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு தரப்பினர் நாய்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தெருநாய்கள் குறித்த இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், "ஒரு நாய் எப்போது கடிக்கும் அல்லது கடிக்காது என்பதை யாராலும் கணிக்க முடியாது; நாயின் மனநிலையை யாராலும் யூகிக்க இயலாது; வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களை 'நாய்கள் இல்லாத இடங்களாக' மாற்ற வேண்டும்" என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு கருத்து தெரிவித்த திவ்யா, "ஆண்களின் மனதையும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஓர் ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. அதற்காக அனைத்து ஆண்களையும் முன்கூட்டியே சிறையில் அடைக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆண்களை நாய்களோடு ஒப்பீடு செய்வதே தவறு என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow Us