‘பேச்சுலர்’ பட நாயகி திவ்யபாரதி, தெலுங்கில் அறிமுகாகும் படம் ‘கோட்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த போது சில காரணங்களால் இயக்குநர் நரேஷ் குப்பிலி படத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு காரணம் நாயகி திவ்ய பாரதியுடன் அவருக்கு ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகளே என சொல்கின்றனர். அவர் வெளியேறியதும் இயக்குநர் பணியை பட தயாரிப்பாளர் கவனித்து வந்தார். இதனிடையே வெளியேறிய இயக்குநர் நரேஷ், அவரது தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியாக திவ்ய பாரதியை மறைமுகமாக சாடும் வகையில் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் சமீபத்திய ஒரு பதிவில் அவர் குறிப்பிட்ட ‘சிலாகா’ என்ற வார்த்தை திவ்ய பாரதியை டென்ஷனாக்கியுள்ளது. அந்த வார்த்தை தெலுங்கில் பெண்களை தவறாக குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறதாம்.
இதனால் திவ்ய பாரதி அவரை கடுமையாக சாடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் பட ஹீரோ சுதீரையும் அவர் விமர்சித்திருந்தார். அதாவது இயக்குநரின் செயலை கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் இயக்குநர் நரேஷும் நாயகன் சுதீரும் கலந்து கொள்ளவில்லை. நிகழ்வில் சர்ச்சை குறித்து பேசிய திவ்ய பாரதி, “எல்லாரிடமும் எனக்கு மரியாதை கொடுங்கள் என்று நான் கேட்க முடியாது. எல்லாருமே அவரவர் வழியில் வித்தியாசமானவர்கள் தான். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இயக்குநர் நரேஷ் சோசியல் மீடியாவில் ‘சிலாகா’ என குறிப்பிட்டார். சிலாகா என்றால் கிளி என்ற அர்த்தம் எனக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த நோக்கத்தில் பயன்படுத்துகிறார் என்பது முக்கியம். அவர் படத்தின் ப்ரோமோவை கிண்டல் செய்யும் விதத்தில் பயன்படுத்தியிருந்தார். அதே சமயம் என்னை தவறாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனால் எனக்காக நான் நின்றேன். என்னுடைய சுயமரியாதை எனக்கு முக்கியம்.
ஆனால் நான் போட்ட பதிவு இவ்வளவு பெரிய கவனத்தை பெரும் என நினைக்கவில்லை. இப்படி பிரச்சனை இருப்பது தெரிந்தும் பட நாயகன் சுதீர் வேறொரு படத்திற்கு ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அழைக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு மோதல் போக்கு இருக்கும் போது இப்படி குறிவைத்து தாக்குவது தவறு. என்னை மோசமாக பேசியதும் தவறு. சுதீரும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார். இது அவருடைய படமும் கூட. அவரது நண்பர் இதுபோன்ற விஷயங்களை பதிவிடும் போதும் ​​அவர் அமைதிகாத்து வந்ததால் அவரையும் நான் விமர்சித்தேன். மற்றபடி அவரிடமிருந்து நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. இருவரிடமும் எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை” என்றுள்ளார்.
Follow Us