ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. பின்பு மகாராஜா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு மீண்டும் ஜி.வி பிரகாஷுடன் கிங்ஸ்டன் படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தெரியும் சூழலில் சில காரணங்களால் இயக்குநர் நரேஷ் குப்பிலி படத்தில் இருந்து வெளியேறினார். இதற்கு காரணம் நாயகி திவ்ய பாரதியுடன் அவருக்கு ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகளே காரணம் என கூறப்படுகிறது.
அவர் வெளியேறியதும் இயக்குநர் பணியை பட தயாரிப்பாளர் கவனித்து வருகிறார். இதனிடையே வெளியேறிய இயக்குநர் நரேஷ், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியாக திவ்ய பாரதியை மறைமுகமாக சாடும் வகையில் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் சமீபத்திய ஒரு பதிவில் அவர் குறிப்பிட்ட ‘சிலாகா’ என்ற வார்த்தை திவ்ய பாரதியை டென்ஷனாக்கியுள்ளது. அந்த வார்த்தை தெலுங்கில் பெண்களை தவறாக குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறதாம்.
இந்தப் பதிவை திவ்யபாரதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநரை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, “பெண்களை அந்த சொல்லில் அழைப்பது நகைச்சுவை அல்ல. இது பெண் வெறுப்பின் பிரதிப்பலிப்பு. இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் அதே மாதிரி தான் நடந்து கொண்டார். பெண்களை தொடர்ந்து அவமதித்தார். நேர்மையாக சொல்லவேண்டும் என்றால், அவர் உருவாக்கிய கலைக்கே துரோகம் செய்தார்.
இதில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது என்னவென்றால், இதனை படத்தின் ஹீரோவும் அமைதியாக இருந்து, படத்தில் நீடிக்க வேண்டும் என அனுமதித்தார். பெண்களை கேலிக்கு குறிவைக்கப்படாத இடத்தை தான் நான் தேர்வு செய்கிறேன். அங்கு ஒவ்வொரு குரலும் முக்கியம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை கிளப்ப சர்ச்சையானது. திவ்ய பாரதிக்கு எதிராகவும் சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து மற்றொரு பதிவில், “படக்குழுவுடன் எனக்கு எப்போதும் பிரச்சினைகள் இருக்கிறது என கூறுபவர்களே, உண்மை ரொம்ப முக்கியம். நான் தமிழ் சினிமாவில் ஒரே படக்குழுவினருடன் மீண்டும் மீண்டும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அவர்களுடன் எனக்கு எந்த பிரச்சினையுமே வந்ததில்லை. ஆனால் இந்த ஒரு இயக்குநர் மட்டும் தான், எல்லை மீறி அவமரியாதையாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதுவும் பகிரங்கமாக பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்க எனக்கு முழு உரிமையும் உண்டு. அதற்காக நான் என் தூக்கத்தை இழக்கவில்லை. யாராவது என்னைப் பற்றி மோசமாக பேச முடிவு எடுத்தால் அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us