பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை மதுரையில் முதல் நாள் முதல் காட்சியை சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் ரசிகர்களுடன் கண்டு கழித்தனர். இந்த நிலையில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சிவகார்த்திகேயனும் ராதிகாவும் தனக்காக மதுரைக்கு வந்து பார்த்ததாக தெரிவித்தார்.
பின்பு அவரிடம் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கும் சேயோன் படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, படத்தின் கதை விருமாண்டி சாமியை வைத்து எடுக்கப்படுவதால் முருகனுக்கு எதிரான படமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இரண்டு தெய்வங்களை வழிபடுகிற கதையுமே படத்தில் இருக்கும். யாருக்கும் எதிரான படமாகவும் சாதகமான படமாகவும் இருக்காது. எல்லா தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற ஒரு சரியான படமாகத்தான் இருக்கும்” என்றார்.
சேயோன் படம் கமல் தயாரிப்பில் உருவாகிறது. சமீபத்தில் வெளியான அறிவிப்பு ப்ரோமோவில் விருமாண்டி சாமியாடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us