Advertisment

அந்தோனி பட விழா; மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

antony

Director Seenu Ramasamy apologizes to actor at 'Anthony' film festival

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘அந்தோனி’. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர். மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “இந்த அந்தோனி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  நான் கண்கலங்கினேன். இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது. அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.

Advertisment

ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான்  கருதுகிறேன். என் உள்ளுணர்வு அதைத்தான் கூறியது. இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு,  போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு  எப்படி இருக்கும்? வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும். அந்த நாடு அழிவில் இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பாரின்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா? உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்? நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான். அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை. என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன். இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார். அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார். நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு. நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .

வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார். நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது. இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது. ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது. எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு. மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது. நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும், அபிப்ராயங்களை அழிப்பதும், அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைய உலகம். அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக, போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த ‘அந்தோனி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும். எனக்கு ‘நீர்ப்பறவை’ கால கட்டம் நினைவுக்கு வந்தது. இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை. வேறு யாருமே கிடையாது. தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே வந்திருப்பது பெருமை. எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை. அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக் காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

Movie seenu ramasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe