தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் சிவகார்த்திகேயன் இன்ரு பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், “என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்த நிலையில் நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், சிவகார்த்திகேயன் தொடர்பாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது சமூக வலைதாப் பக்கத்தில் வெளியிட்ட அவர், “நண்பர் ஒருவரின் மகளுக்குத் திருமணம்… அதற்கு முதல் நாள் பெண் அழைப்பு. கலந்துகொண்டேன். இரு கரம் நீட்டி வாஞ்சை காட்டும் நண்பரின் முகத்தில் அவ்வளவு மகிழ்வு இல்லை. திருமண வீட்டிற்கே உரிய எந்தக் கலகலப்பும் நிம்மதியும் அங்கு இல்லை. விசாரித்தபோது, பெண் வீட்டார் பெரிய அளவில் வசதியானவர்களாக இல்லாததுதான் மாப்பிள்ளை வீட்டார்க்குக் குறையாகப் பட்டிருக்கிறது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக மாப்பிள்ளை வீட்டார் குறைகூற, பெண் வீட்டார் சங்கடத்துடன் நின்றார்கள்.

Advertisment

அந்த நேரத்தில் எனக்கோர் அழைப்பு. தம்பி சிவகார்த்திகேயன் வேறொரு விஷயத்திற்காக அழைத்திருந்தார். அவர் கேட்ட தகவல்களைச் சொன்னேன். கூடவே, நான் கலந்துகொண்ட நிகழ்வின் கவலையை அவர் கேட்காமலே சொன்னேன். இன்னும் வசதி வாய்ப்புகளையும் வரதட்சணையையும் வைத்து மதிப்பிடப்படுகிற பெண்களின் நெருக்கடி வாழ்வை தம்பியிடம் பகிர்ந்தேன். மணமகளின் பெயர் என்ன என்று கேட்டார். சொன்னேன். பிற விஷயங்களைப் பேசிவிட்டு நண்பரின் நிகழ்வுக்கு வந்தேன். பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. நான் நண்பரை அமைதிப்படுத்தினேன். 

சில நிமிடங்களில் என் அலைபேசிக்கு ஒரு வீடியோ பதிவு வந்தது. ‘அன்பு தங்கை ….க்கு, நான் சிவகார்த்திகேயன் பேசுறேன். உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். நீங்களும் மணமகனும் பெருவாழ்வு வாழனும். எல்லோருக்கும் முன்னுதாரணமான வாழ்வை நீங்க வாழப் போறீங்க. உங்க ஊர்ப் பக்கம் வர்றப்ப நிச்சயம் உங்க எல்லாரையும் சந்திக்கிறேன்’ என வீடியோ பதிவு அனுப்பி இருந்தார் சிவகார்த்திகேயன். நான் சிலிர்த்துப் போனேன். உடனே மணமகளின் தந்தைக்கு அந்தக் காணொளியை அனுப்பினேன். அவர் அதைத் தன் மகளுக்குக் காட்ட, அடுத்த சில நிமிடங்களில் மணமகன் வீட்டார் அத்தனை பேருக்கும் அது பரவியது. அதுவரை நிலவிய குழப்பங்கள் போன இடம் தெரியாமல் போயின. ‘சிவகார்த்திகேயனே வாழ்த்தி இருக்கார்னா அது எவ்வளவு பெரிய விஷயம்…’ என ஒருகட்டத்தில் மணப்பெண்ணைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது அந்தக் குடும்பம். 

Advertisment

நிமிடத்தில் சிவகார்த்திகேயன் யோசித்த விதம்தான் இதில் மிக முக்கியமானது. அந்தக் குடும்பத்தைப் பற்றிச் சொன்ன நான் அவரிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை. ஆனால், சட்டென யோசித்து அவர் செயல்பட்ட சமயோசிதம் மகத்தானது. இன்றைக்கு அந்தக் குடும்பம் பேரன்பின் அடையாளமாக ஜொலிக்கிறது. தம்பி சிவகார்த்திகேயனை பற்றி பேசுகிற போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் ஏன் சிலிர்க்கிறேன் என்றால், காரணம் பிறர் மீது அவர் காட்டுகிற இத்தகைய பேரன்பும் அக்கறையும்தான். தன்னால் ஏதாவது உதவ முடியுமெனில் அதைச் செய்துதான் பார்ப்போமே என்கிற மெனக்கிடல் அவருக்கு எப்போதுமே உண்டு. அந்த மணமக்களின் சார்பாக மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் நீங்கள் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.