கேரளாவில் 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகை 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி எனவும் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் நிரபராதி எனவும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முதல் குற்றவாளி பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.5 லட்சம் அபராதமும் மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் திலீப்பின் விடுதலை கடும் விவாதத்துக்கு உள்ளானது. மலையாள நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் திலீப் விதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களோடு பெண்கள் நல அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே கேரளா அரசு சார்பில் திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். இதற்கு தற்போது கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட நடிகை வேதனையுடன் இரண்டு முறை நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் புகார் கொடுத்தற்கு பதில் தற்கொலை செய்திருக்க வேண்டும் என மனம் உடைந்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் திலீப்பின் சகோதரி ஜெயலட்சுமி இரண்டு செய்தி சேனல்களுக்கு எதிராக ஆலுவா காவல் நிலைய அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். அதில் அந்த இரண்டு சேனல்களும் தனது குடும்பத்தின் தனியுரிமையை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் புகாரியில், “கடந்த 8ஆம் தேதி எங்கள் வீட்டில் எங்களின் அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறந்தது. அதில் வீட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகள் பின்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. திலீப்பிற்கு எதிரான ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில் தான் இந்த சம்பவமும் நடந்தது.
ட்ரோன்கள் மூலம் எங்களை படம் பிடிக்க எந்த ஊடகத்திற்கும் அதிகாரம் இல்லை. சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த ட்ரோன் நடவடிக்கை வணிக லாபத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இது வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்ட ட்ரோன்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என்றுள்ளார்.
Follow Us