மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’ திபாவளி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அமீர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் துருவ் விக்ரம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் துருவ் விக்ரம் பேசுகையில், “மனத்தி கனேசன் சாரின் கதையை கேட்டு எப்படி நான் நடிக்கப்போகிறேன் என யோசித்தேன். ஆனால் அவர் எனக்கு முறையான பயிற்சி கொடுத்து உதவினார். அவர் அடிக்கடி ‘ஒன்னும் செய்யாது’ என சொல்வார். அது இன்னுமுமே என் மனசுல ஆழமாக பதிஞ்சிருக்கு. பசுபதி சார் தூள் படத்தில எங்க அப்பாவுக்கு வில்லனா நடிச்சாரு. சின்ன வயசுல அவர நேர்ல பாத்திருந்தனா கண்டிப்பா பயம் இருந்திருக்கும். ஏன்னா அவருடைய ஹேர்ஸ்டைல் அப்படி. அப்புறம் மஜா படத்துல அண்ணனா நடிச்சாரு. அதுக்கப்புறம் என் கூட இந்த படத்துல அப்பாவா நடிச்சிருக்காரு. ரொம்ப சந்தோஷம்” என்றார். தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்தார்.
அடுத்து அவரது குடும்பத்தைப் பற்றி பேசிய அவர், “என் அம்மாவை படிப்பு விஷயத்தில் கொஞ்சமாவது சிரிக்க வைப்பேனா என சின்ன வயசில் ஏங்கியிருக்கேன். ஏன்னா அவங்க பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்கு வரும் போது, உங்க பையன் நல்லா படிக்க மாட்டேங்கிறான்னு டீச்சர்லாம் திட்டுவாங்க. அதனால அம்மாவுக்கு எப்போதுமே என் மேல ஒரு ஏமாற்றம் இருக்கும். ஆனா இந்த படத்தால அவங்க கொஞ்சம் பெருமையா ஃபீல் பன்னுவாங்கன்னு நினைக்கிறேன். என்னுடைய அப்பா சியான், ஒவ்வொரு முறையும் கஷ்டமான சீன் பன்னும் போதும் அவர் என்னுடைய மனசுலேயே இருப்பார். அவர் அவ்ளோ பன்னும் போது நம்மலால கொஞ்சம் கூட உழைக்க முடியாதான்னு ஒரு யோசனை மைண்ட்குள்ள ஓடிட்டே இருக்கும். அவர் மாதிரி இருக்க முடியுமான்னு எனக்கு தெரில. அவர் புள்ளையா இருக்குறதுக்கு நான் என்ன பன்னிருக்கேன்னும் தெரியல. ஆனா அதற்கு தகுதியானவனா இருக்க எல்லா வேலைகளையும் பார்க தயாரா இருக்கேன்” என்றார்..