மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பைசன்’ திபாவளி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், அமீர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் துருவ் விக்ரம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், அமீர் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் துருவ் விக்ரம் பேசுகையில், படத்தில் பனியாற்றிய அனைவரது குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து பேசுகையில், “இவ்ளோ பெரிய படத்தை கொடுத்த என்னுடைய குரு மாரி செல்வராஜுக்கு நன்றி. அவருக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது. நிறைய பேர் மூனு வருஷம் அவருக்காக நான் வெயிட் பன்னிருக்கன்னு சொல்றாங்க. ஆனா அவருக்காக பத்து வருஷம் கூட வெயிட் பன்னுவேன். சில பேர், நான் நிறைய ஹார்ட் ஒர்க் போடுறேன்னு சொல்றாங்க. ஆனா பசுபதி சார் சொல்ற மாதிரி, ஒரு வேளை மாரி சார் இதுல நடிச்சிருந்தா, இந்த படம் வேற லெவல்ல இருந்திருக்கும்னு நம்புறேன்.
ஒவ்வொரு முறையும் அவர் பன்றதுல ஒரு பத்து பெர்சண்ட்டேஜ் அதை உள்வாங்கு நடிச்சிட்டா அந்த சீன் நல்லா வந்துரும். அவருடைய டேக் ஓகேக்கும், அவர் பாராட்டுற சூப்பர் டா-க்கும் எப்பவுமே ஏங்கிட்டு இருப்பேன். அது நடந்துட்டாலே லைஃப்ல ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். இந்த படம் எனக்காக கூட ஜெயிக்கனும்னு ஆசைப் படல. அவர் போட்ட உழைப்புக்காக கண்டிப்பா ஜெயிக்கனும். அவர் ஒரு நார்மல் டைரக்டர் கிடையாது. சினிமா மேல பைத்தியமும் வெறியும் உள்ள டைரக்டர். அவர் கூட இன்னொரு படம் பண்ணுவனான்னு தெரில. அதுக்காக எப்பவுமே ஏங்கிட்டு இருபேன்” என்றார்.