மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் நடக்கும் சாதிய பிரச்சனைகளையும் பேசியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இதனிடையே இப்படம் தெலுங்கில் வருகின்ற 24ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது புரொமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் துருவ், கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் சாதி ஆதிக்கம் இந்தியா முழுவதும் இருக்கும் நிலையில் மற்ற சினிமாத் துறையை விட தமிழ் சினிமாவில் அதிகம் சாதி குறித்து படம் எடுக்கப்படுகிறதே எனக் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த துருவ், “மாரி செல்வராஜ், அவரது சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்து படம் எடுக்கிறார்.
ஒவ்வொரு இயக்குநருக்கும் அவர்களது கலையை அவர்கள் விரும்பும் விதத்தில் எடுக்க உரிமை இருக்கிறது. இந்தியாவில், குறிப்பாக தென் தமிழ்நாட்டில் சாதிய சிக்கல்கள் இருக்கும்போது, ​​அதைக் கையாள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் முக்கியம். இதைப் பற்றி மக்களுக்குக் எடுத்துரைக்க சினிமா ஒரு நல்ல கருவி” என்றார்.