தனுஷ் கடைசியாக இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் ‘தேரே இஷ்க் மே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதைத் தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அப்துல் கலாமின் பயோபிக் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் தேரே இஷ்க் மே படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘ஏ கலர் எல்லோ புரொடைக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் க்ரீத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஷ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து இந்தியில் ராஞ்சனா(தமிழில் அம்பிகாபதி) மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படக்கதையே இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது.
முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ்,ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மேடையில் தனுஷ் திடீரென படத்திலிருந்து வெளியாகாத பாடலை நேரடியாக பாடி ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்தார். ‘நல்ல காலம் வந்துருச்சு நான் பெத்த ஐயா...’ என தனுஷ் பாடத் தொடங்க அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னணியில் ஏ.ஆர் ரகுமானும் பியானோவில் இசையமைக்க சிறிது நேரம் பாடலை தனுஷ் பாடினார். அவர் பாடி முடித்ததும் ஏ.ஆர் ரகுமான் மைக்கை வாங்கி இப்பாடலை தனுஷ் எழுதியதாக தெரிவித்தார். இதற்கும் ரசிகர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோவை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “இது போன்ற ஒரு தருணம் உண்மையாகவே ஸ்பெஷலானது” எனக் ஏ. ஆர் ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படங்களை மற்றொரு பதிவில் பகிர்ந்து இரண்டு ஹார்ட் எமோஜியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இன்று காலை படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.
Follow Us