சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் தேவா பேசுகையில், “ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் என்னை உட்கார வைத்து கௌரவப்படுத்தினார்கள். அது எதுக்கு என்றால், பத்து வருஷம் முன்பு இங்கிருந்த கிராமிய கலைஞர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று அங்கு இருப்பவர்களுக்கு பறை இசையை சொல்லிக் கொடுத்தேன். அதுக்காகத்தான் ஆஸ்திரேலிய பாராளுமன்றம் என்னை கௌரவித்தது. ஒருமுறை அங்கு நான் மேடையில் பறை இசை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மேயர் ரெண்டு எம் பி, மேடைக்கு வந்து எங்களிடம் இருந்து பறையை வாங்கி அவர்கள் வாசித்தார்கள். அவ்வளவு அழகாக வாசித்தார்கள்.
இந்தப் படத்தில் நான் இசையமைத்ததற்காக பெருமைப்படுகிறேன். படத்தில் நான் ஒரு பாடல் பாடி இருக்கிறேன். இந்தப் பாடலை நீங்கள் அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஏனென்றால் சித்திரை மாதம் வந்தால், மதுரையில் கள்ளழகர் இறங்கும்போது ‘வாராரு வாராரு கள்ளழகர் வாராரு...’ பாடல் ஆந்தமாக அமைந்துவிட்டது. அதேபோல் ஆயுத பூஜை வந்தால், ‘நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்...’ பாடல் ஆந்தமாக அமைந்துவிட்டது. அடுத்து கோயில் திருவிழா வந்தால், ‘கோலவிழி அம்மா ராஜகாளியம்மா..’ பாடல் ஆந்தமாக அமைந்துவிட்டது. இந்தப் பாடல்கள் அனைத்தும் நிரந்தரமாக இருக்கிறது. அதே போல் இந்த படத்தில் நான் பாடிய ‘ஆதி சிவன் அடிச்ச பறையடா...’ என்னும் பாடல், எங்கெல்லாம் பறை இசைக் குழுவினர் நிகழ்ச்சி நடத்துகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பாடல் ஆந்தமாக ஒலிக்க வேண்டும். அப்படி நினைத்து தான் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.
Follow Us