சமீப காலமாக தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை பயன்படுத்தும் ட்ரெண்ட் அதிகமாகி வருகிறது. இதில் இளையராஜா மற்றும் தேவாவுடைய பாடல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இளையராஜா தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ், கூலி,  குட் பேட் அக்லி உள்ளிட்ட சில படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பினார். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் இசையமைப்பாளர் தேவா இதுவரை எந்த படக்குழுவுக்கும் நோட்டிஸ் அனுப்பியதில்லை. இதற்கான காரணத்தை தற்போது தேவா தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த தலைமுறைக்கு தன்னுடைய பாடல்கள் சென்றடைவதால் காப்புரிமை கேட்பதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு உதாரணத்துடன் விளக்கினார். 

Advertisment

இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அதை கேட்டாலும் எங்கேயோ போய் முடிகிறது. என்னுடைய 90ஸ் பாடல்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் ‘கரு கரு கருப்பாயி...’ பாடல் பயன்படுத்தப்பட்டது. அது நல்ல ஹிட்டடித்தது. அந்த பாடலை நான் 1992இல் போட்டேன். 

Advertisment

ஒரு நாள் மாலுக்கு பொருள் வாங்க போயிருந்தேன். அப்போ அங்கே வந்திருந்த ஒரு அப்பா தன் மகனிடம் ‘நீ கரு கரு கருப்பாயி’ பாட்டு கேப்பீல்ல... அந்த பாட்டுடைய இசையமைப்பாளர் இவர் தான் என என்னை கை காமித்தார். அப்படியா என அந்த சிறுவன் அதிர்ச்சியாய் என்னிடம் கை கொடுக்க வந்தான். இப்ப இருக்கிற பசங்களுக்கு அந்தப் பாடல் எல்லாம் தெரியுது. அதனால் காப்புரிமை கேட்பதில்லை” என்றார். இதனை கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது காப்புரிமை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது பேசினார்.