பழைய பாதைக்கு திரும்பினாரா? - ‘தேசிங்கு ராஜா:2’ விமர்சனம்!

Tr

சமீப காலங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகர் விமல் மீண்டும் தேசிங்கு ராஜா 2 படம் மூலம் பழைய பாதைக்கு திரும்பி இருக்கிறார். அப்படி என்ன பாதை எது என்பதை பார்ப்போம்...

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் விமலுக்கும் பக்கத்து ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் புகழுக்கும் இடையே பல்வேறு விதமான போட்டி சண்டை நிலவுகிறது. இவர்கள் அடிக்கடி மோதிக்கொண்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர். அந்த சமயத்தில் முதல்வர் ஆர்பி உதயகுமார் தலைமையில் இருக்கும் கட்சிக்காரரான ரவி மரியா உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று காணாமல் போகிறது. அந்த சீடியை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுக்குமாறு விமல் அண்ட் டீமை ரவி மரியாதை கேட்டுக் கொள்ள அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு அந்த சீடியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். அவர்கள் அந்த சீடியை கண்டுபிடித்து ரவிமரியாவிடம் கொடுத்தார்களா, இல்லையா? அந்த சீடியில் என்ன இருந்தது? விமல் அண்ட் டீம் ரவி மரியாவை பழி வாங்க காரணம் என்ன? என்பதே இந்த தேசிங்கு ராஜா 2 படத்தின் மீதி கதை.

இயக்குனர் எழில் சில வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய காமெடி வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். அவர் தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு தேசிங்குராஜா 2 படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார். இந்தப் படத்தை அவர் ஏற்கனவே இருக்கும் பழைய டிரெண்டிலேயே இயக்கியிருப்பது நடிகர் விமல் மீண்டும் பின்னோக்கி இழுத்து இருக்கிறது. கொஞ்சம் கூட இந்த காலத்திற்கு ஏற்றார் போல் நல்ல காமெடி படமாக இந்த படம் அமையாமல் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அறந்தப்பழசான ஒரு கதை அமைப்பை வைத்துக்கொண்டு அதனுள் செயற்கை தனமாக நடிக்கும் நடிகர்களை வைத்துக்கொண்டு காமெடி என்ற பெயரில் நம்மை சோதிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்து பார்ப்பவர்களுக்கு அயற்சி மற்றும் எரிச்சல் ஊட்டும் படியான ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் பார்ப்பவர்களுக்கு படமே புரியாதபடிக்கு படம் முழுவதும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும் நடிகர்கள் ஒரு பக்கம் கதை எங்கெங்கோ பயணித்து எப்படி எப்படியோ போகும் படி இருக்கும் திரைக்கதை ஒரு பக்கம் இவை இரண்டும் வேறு வேறு பாதையில் பயணிப்பதால் எதை பின்தொடர்வது என குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் என படம் ஆரம்பித்தது ஒரு இடம் செல்வது ஒரு இடம் கடைசியில் முடிவது ஒரு இடம் என மிகவும் சுமாரான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எழில். நடிகர் விமல் இதற்கு முன்பு பல்வேறு தோல்வி படங்களை கொடுத்து அவரது கரியரில் மிகவும் பின்னோக்கி சென்று கொண்டிருந்த காலகட்டத்திற்கு மீண்டும் சென்றிருக்கிறார். சமீப காலங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கவனம் பெற்ற நடிகர் விமல் மீண்டும் இந்த படம் மூலம் தன் தோல்வி படங்களாக கொடுக்கும் பழைய பாதைக்கு திரும்பி இருக்கிறார். காமெடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் எழில் சில இடங்களில் மட்டும் நம்மை சிரிக்க வைத்து பல இடங்களில் நம்மை சோதிக்கவும் வைத்திருக்கிறார். கதைக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை கொடுத்திருந்தால் காமெடி காட்சிகளும் திரை கதையும் நன்றாக படத்திற்கு ஏற்றார் போல் ஒத்துழைப்பு கொடுத்து பார்ப்பவர்களையும் ரசிக்க வைத்திருக்கும். ஏனோ திரைக்கதையில் கோட்டை விட்டு இருப்பது இந்த படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.

நடிகர் விமல் வழக்கம் போல் ஒன்லைன் காமெடிகள் மற்றும் பழைய ரூட்டுக்கே சென்று நடித்திருக்கிறார். விலங்கு போன்ற பிராமிசிங்கான படங்களில் நடித்து கவனம் பெற்ற விமல் அதேபோன்று ஒரு கதாபாத்திரம் ஏற்காமல் மீண்டும் பழைய காமெடி பாதையில் திரும்பி இருப்பது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. கதை தேர்வில் விமல் இன்னமும் கூட கவனமாக இருந்திருக்கலாம். விமலின் நண்பராக வரும் நடிகர் ஜனா தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் மகன் என்பதால் இவருக்கு பல சீன்கள் வலியை திணிக்கப்பட்டிருக்கிறது. அதுவே படத்தை வேறு ஒரு திசைக்கு கொண்டு செல்ல காரணமாகவும் இருக்கிறது. காமெடி காட்சிகளுக்கு பொறுப்பு ஏற்று இருக்கும் விமல் புகழ் சாமிநாதன் ரவி மரியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் அவரவர் வேலையை கலகலப்பாக செய்து ஓரளவு கிச்சுகிச்சு மூட்டி பல இடங்களில் சோதிக்கவும் வைத்திருக்கின்றனர். படம் முழுவதும் இவர்கள் அனைவரும் நச நச என்று பேசிக் கொண்டிருப்பது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டும்படி அமைந்திருக்கிறது. படத்தில் புதுமுகநாயகிகள் பலர் வலம் வருகின்றனர் அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே முக சாயலில் இருப்பதும் ஒரே மாதிரி நடிப்பதும் படத்திற்கு பெரிதாக உதவவில்லை. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் இவர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஒரு நடிகர் பட்டாளமே காமெடி என்ற பெயரில் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட நாம் பல இடங்களில் பார்த்து ரசித்த காமெடி நடிகர்கள் அனைவருமே இந்த படத்தில் இருக்கின்றனர் ஆனால் சிரிப்புதான் வரவில்லை. இந்தக் கூட்டத்தின் நடுவே பெண் வேடமிட்டு நடித்திருக்கும் புகழ் மட்டும் தனக்கு கொடுத்த இடத்தை சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். அவருக்கு இந்த வேடம் மட்டும்தான் இத்தனை படங்களில் சிறப்பானதாக அமைந்திருக்கிறது அதையும் அவர் நிறைவாக செய்திருக்கிறார். இந்த வேடத்தில் இவ்வளவு கவனமாக நடித்திருக்கும் புகழ் இதே போன்று மற்ற வேடங்களையும் நடித்திருந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். மற்றபடி நடித்த அனைவருமே அவரவர் வேலையை ஏதோ ஒரு வகையில் செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசாகர் இசை என்றதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாக மாற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் பின்னணி இசையும் ஓகேதான். செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு நிறைவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கமர்சியல் படங்களுக்கே உரித்தான பழைய பாணியில் காட்சி அமைப்புகள் இருப்பது சற்றே அயற்சியை கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்த எழில் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படத்தின் பெயரை இந்த படத்திற்கு எடுத்துக் கொண்ட இயக்குனர் அந்தப் படத்திற்கு கொடுத்த அதே காமெடி காட்சிகளை இந்த படத்திற்கும் கொடுத்திருந்தால் இந்த படம் நிச்சயமாக வெற்றிப்பட வரிசையில் இணைந்திருக்கும். காமெடி என்ற பெயரில் ஏதேதோ பேசி எதையெதையோ செய்து எந்தெந்த காட்சியோ வைத்து அதை பார்ப்பவர்களுக்கும் புரியாமல் நடிப்பவர்களும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோ ஒன்று தொடங்கி ஏதோ ஒன்று முடியும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் எழில் இந்தப் படத்தை உண்மையில் அவர்தான் இயக்கினாரா என்ற சந்தேகமே பார்ப்பவர்களுக்கு உருவாகியிருக்கிறது. அந்த அளவு காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களுக்கு தலைவலியை மட்டும் இந்த தேசிங்கு ராஜா 2 கொடுத்திருக்கிறார்.

 

தேசிங்கு ராஜா 2 - தேவையற்ற ராஜா!

moviereview vimal
இதையும் படியுங்கள்
Subscribe