பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், தற்போது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படத்தில் நடிக்கிறார். இதைத் தவிர்த்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் மற்றும் கல்கி 2898 ஏடி படங்களில் கமிட்டாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் வெளியேறப்பட்டார். இதற்கு அவர் கடந்த ஆண்டு தாயான பிறகு, 8 மணி நேரம் தான் வெலை செய்ய முடியும் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து பேசியதே காரணம் என பரவலாக சொல்லப்படுகிறது. அந்த பேச்சு குறித்து சமீபத்திய பேட்டியில் விளக்கமளித்த அவர், ஆண் நடிகர்களும் 8 மணி நேரம் தான் வேலை செய்கிறார்கள் என அவர்களை கடுமையாக சாடினார்.
இதனிடையே இன்னொரு சர்ச்சையில் சிக்கினார். அபுதாபியின் விளம்பர தூதராக இணைந்து அதன் விளம்பரத்தில் ஹிஜாப் போன்று உடல் முழுவதும் மறைத்தபடி முகம் மட்டும் தெரியும்படி உடை அணிந்திருந்தார். அது சிலரால் விமர்சிக்கப்பட்டது. அதாவது இந்து மரபுகளை அவர் அவதித்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டது. சமீப காலமாகத் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர் பேசு பொருளாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறர். ஆனால் சர்ச்சையில் இல்லை. அவருக்கு ஒரு புதுப்பதவி அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று(10.11.2025) அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்ட்கிராம் பதிவில், “உலக மனநல தினத்தன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நமது நாட்டு பொது சுகாதாரத்தின் மையமாக மனநலத்தை வைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் எங்கள் அறக்கட்டளையின் மூலம் நாங்கள் செய்த பயணம் மற்றும் பணியின் மூலம், மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்தால் எவ்வளவு சாத்தியம் என்பதை கண்டோம். இந்தியாவின் மனநல கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ஜே.பி. நட்டா மற்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் செயல்பட எதிர்நோக்கியிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய சுகாதார செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தீபிகா படுகோன், மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைச் சரி செய்ய ‘தி லைவ் லவ் லாஃப் ஃபௌண்டேஷன்’(The Live Love Laugh Foundation) என்ற அறக்கட்டளையைக் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதில் இவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே மத்திய அரசு இந்த பொறுப்பு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.