அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நேற்று முன் தினம் நடந்தது. அதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் அங்கு இசை கச்சேரியும் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்து கொண்டனர். அதனால் இந்நிகழ்வு மலேசியா சாதனை புத்தகத்தில் அதிக பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இடம் பிடித்தது.

Advertisment

ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. அதில் பிரச்சனைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த போல் டிக்கெட் முன்பதிவும் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய்யின் தவெக கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தற்போது சென்சார் விவகாரம் தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment