மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் சேரன், வசந்த பாலன், நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், நந்தா பெரியசாமி உள்ளிட்டோர் வரை பாராட்டு தெரிவித்தன. அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தை அரசியல் தலைவர்கள் கி.வீரமணி, முத்தரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, வேல்முருகன் எம்.எல்.ஏ, ஈஸ்வரன் எம்.எல்.ஏ, நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட பலர் சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்துள்ளனர். பின்பு மாரி செல்வராஜுக்கு சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் படம் தொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
அப்போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், “சடுகுடு போட்டி, நம்ம எல்லாம் சின்ன வயதில் விளையாடி இருப்போம். அந்த சடுகுடு போட்டியை மையமாக வைத்து இந்த சமூகத்தில் எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சாதாரண மக்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவது என்பது இன்றைக்கும் ஏராளமான தடைகள் இருக்கிறது. பி. சீனிவாசராவை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரு மகத்தான தலைவர். அவருடைய பேரனை இந்த விளையாட்டுப் போட்டியில் சேர்ப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தேன். ஒரு மத்திய அமைச்சரை சந்திச்சு சிபாரிசு பண்ணேன். அவருக்கு இல்லாததா என்று அவர் சொன்னார். ஆனால் சேர்க்கமுடியவில்லை. நிராகரிச்சிட்டாங்க.
அந்த மாதிரி பல தடைகள் இருக்கு. ஒரு படம் எவ்வளவு எத்தனை கோடி லாபம் சம்பாரிப்பது என்பது முக்கியமல்ல. அது எத்தனை நாள் ஓடியது என்பது முக்கியமல்ல. எந்த அளவிற்கு மக்களிடத்திலே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது என்பது தான் மிகமிக முக்கியமானது. அண்ணன் செல்வப் பெருந்தகை இந்தப் படம் தேசிய விருது பெற வேண்டும் என வாழ்த்து சொன்னார். தேசிய விருது கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இந்த நாட்டு மக்கள் இந்த படத்தை அங்கீகரிப்பார்கள். அதுதான் முக்கியம். மாரி செல்வராஜ், ஐந்து படம் அல்ல, இன்னும் ஐம்பது, நூறு, ஆயிரம் படங்களை எடுக்க வேண்டும். என்றென்றைக்கும் எங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தோழமை உணர்வோடு என்றென்றைக்கும் இருக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/11-2-2025-10-25-15-51-44.jpg)