'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் விஷால், இந்நிறுவனம் சார்பில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இறுதியாக லைகா நிறுவனத்திற்கு விஷால் 30 சதவீத வட்டியுடன் ஏற்கனவே அவர் கொடுக்க வேண்டிய 21.29 கோடி பணத்தை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மும்மினேனி சுதிர்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை நான் ஏற்கனவே விசாரித்திருக்கிறேன் எனவும் அப்போது சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறேன் எனவும் கூறி வேறு அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டார். அதன்படி இன்று வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், குறிப்பிட்டத் தொகையை டெபாசிட் செய்யலாம் என விஷால் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, ‘ரூ.15 கோடி கடனுக்கு ஆண்டுக்கு 30 சதவீதத்துடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவு சட்டவிரோதம்’ என வாதிடப்பட்டது. மேலும் வட்டி மட்டும் ரூ.40 கோடி வருவதாகவும் லைகா தரப்பில் சொல்வது போல் விஷால் பணக்காரர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் அப்படியானால் விஷால் திவாலானவர் என்று அறிவிக்க தயாரா என கேள்வி எழுப்பினர். மேலும் 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இதை இப்படி சுரண்டுவதை அனுமதிக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்து லைகா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். பின்பு ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/14-19-2025-11-24-17-08-46.jpg)