கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு கும்பல் காரில் புறப்பட்டு சென்ற நிலையில், மற்றொரு கும்பல் அவர்களை விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஐடி ஊழியரை தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருப்பது தெரியவந்தது. பின்பு லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீஸார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து அந்த நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர். லட்சுமி மேனன் தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து லட்சுமி மேனன் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்து லட்சுமி மேனன் தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பினருக்கும் சுமுகமான பேச்சுவார்த்தை எட்டியுள்ளதாகவும் அதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லட்சுமி மேனன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Follow Us