பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, இருவரும் ‘பெஸ்ட் டீல் டிவி’ என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்காக இருவரும் ரூ.60 பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் சமீபத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரில், “2015 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் அவர்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக இடைத்தரகர் மூலம் ரூ.75 கோடி கடன் கேட்டனர். இதற்கு 12 சதவீத விட்டி பேசப்பட்டது. முதலில் இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் பின்பு பணத்தை முதலீடாக மாற்றும்படி வற்புறுத்தினர். இதை வட்டியைத் தவிர்க்க செய்தனர். அதே சமயம், மாதாந்திர வருமானம் மற்றும் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதாக உறுதி கூறினர்.
இதனால் ஏப்ரல் 2015ஆம் ஆண்டு பங்கு சந்தா ஒப்பந்தத்தின் கீழ் ரூ31.95 கோடியையும், செப்டம்பர் 2015ஆம் ஆண்டு துணை ஒப்பந்தத்தின் கீழ் ரூ.28.53 கோடியையும் அவர்களுக்கு அனுப்பினேன். மொத்தத் தொகையும் அவர்களின் நிறுவன வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ஷில்பா ஷெட்டி 2016ஆம் ஆண்டு, அந்நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு வேறொரு நபரின் ஒப்பந்தம் தொடர்பாக அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் இடைத்தரகர் மூலம் எனது பணத்தை மீட்டெடுக்க முயற்சிகள் எடுத்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் என் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் அவர்களது தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி என்னை ஏமாற்றியுள்ளனர்” என்றுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது மும்பை ஜூஹு காவல் நிலைய அதிகாரிகள் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். பின்பு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, அத்துறை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர். இதையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தனர். இதனை ரத்து செய்யக்கோரி கடந்த வாரம் தம்பதியின் தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சிக்காக கொழும்பு செல்ல தன்னை அனுமதிக்குமாறு தம்பதி தரப்பில் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை யூட்யூப் நிகழ்ச்சிக்காக கொழும்பு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, ஏற்கனவே அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டிஸை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தொலைபேசியில் மட்டுமே அவர்கள் பேசியதாகவும், பயண அனுமதி வழங்கப்பட்ட பின் முறையான அழைப்பைப் பெறுவார்கள் என்றும் கூறினார். இருப்பினும் அவரது கோரிக்கையை நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் எங்கு சென்றாலும் முதலில் ரூ.60 கோடியை செலுத்த வேண்டும் எனக் கூறி வரும் 14ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.