கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சொத்தாட்சியர் சார்பில் இப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர தாஸ் என்பவர் திவாலானவர் என சென்னை உயர்நீதி மன்றம் 2014ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும் அவருடைய சொத்துக்களை நிர்வாகிக்க சொத்தாட்சியரை நியமித்திருந்தது. அவரிடமிருந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்தத் தொகையை செலுத்த ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அவர் தயாரித்த வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஞானவேல் ராஜா எப்போது கடன் செலுத்துவார் என்பது குறித்து பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்தாட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல் ராஜா கடனை திருப்பி செலுத்தவில்லை. எனவே அவரின் சொத்துகளை முடக்க வேண்டும்’ என வாதிட்டார். அதற்கு பதிலளித்த ஞானவேல் ராஜா தரப்பு வழக்கறிஞர், ‘3 கோடி ரூபாயை 24 மணி நேரத்திற்குள் செலுத்தவுள்ளோம். மீதமுள்ள தொகைக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதித்தால் தங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ எனக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றம் உத்தரவிட்ட பணத்தை செலுத்த ஞானவேல் ராஜா எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றம் போதுமான கால அவகாசம் அளித்தும் அதை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். எனவே அந்த கடனை அவர் திருப்பி செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை திரையரங்கில் வெளியிடக்கூடாது. அதே போல் அனைத்து ஓடிடி தளங்களிலும் படத்தை வெளியிட அனுமதி இல்லை’ என தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Follow Us