இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோ பிஸ்னஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா சமீபத்தில் ஹைதரபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்வில் ராஜமவுலி​யின் தந்​தை​யும், திரைக்​கதை ஆசிரியருமான விஜயேந்​திர பிர​சாத், ராஜமவுலி​யின் பின்னாலில் இருந்து ஹனு​மன் இப்​படத்தை இயக்​கு​வதற்கு வழி நடத்​துகிறார் என்றார். பின்பு நிகழ்ச்சியில் மோஷன் போஸ்டர் வீடியோ திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் அது சிறிது நேரம் தடைபட்டு போனது. இதனால் கோபமான ராஜமௌலி மேடையில் பேசுகையில், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொள்வதாக சொன்னார். இப்படித்தான் பார்த்துக் கொள்வாரா. இதை நினைத்தால் எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மேல் நிறைய அன்பு உண்டு. அவர் அனுமனை தனது நண்பனை போல நினைத்து பேசுவார். இதனால் மனைவி மீதும் எனக்கு கோபம் உண்டு” என்றார்.
ராஜமௌலியின் இந்த பேச்சுக்கு ஹனுமன் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஒரு சிலர் ராஜமௌலிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால் சர்சையானது. இது தற்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. ராஜமௌலி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்ட்ரிய வனர சேனா அமைப்பினர் ஹைதரபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரில், ‘இந்து புராணக் கதைகளை சுற்றிப் படம் எடுத்தும் தன்னுடைய படங்களில் வெளிப்படையாக ஆன்மீக தெய்வங்களை பயன்படுத்தியும் வந்த ராஜமவுலி திடீரென ஒரு நாத்திகாக தன்னை காட்டிக் கொள்கிறார். இவரது கருத்துக்கள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற கருத்துக்களை தடுக்க கடுமையான நடவடிக்கை அவசியம்’எனக் குறிப்பிட்டுள்ளனர். ராஜமௌலி மீது புகார் கொடுத்த இந்த சம்பவம் தெலுங்கு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us