திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் இந்திய திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி அதற்கான விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (07.01.2026) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, கே.பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பேசுகையில், “பாக்யராஜ் பெரும்பாலும், குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுப்பதுண்டு. அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் நான் பார்ப்பதுண்டு. 

Advertisment

ஒரு படம் கூட நான் தவறவிட்டது கிடையாது. சென்னையில் படம் பார்த்தால், கூட்டம் அதிகமாக இருக்கும்; வசதியாக பார்க்க முடியாது. அப்போது எனக்கு உதயன் பிறந்திருந்தான். இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி அப்போது கைக்குழந்தையாக இருந்தார். அதனால், எங்கேயாவது அழைத்துக் கொண்டு சென்றால், அழுது கொண்டிருப்பான். அதற்காக குரோம்பேட்டையில் இருக்கக்கூடிய வெற்றி தியேட்டருக்கு, பல்லாவரத்தில் இருக்கக்கூடிய தியேட்டருக்குச் சென்று பாக்ஸில் உட்கார்ந்து பார்ப்பதுண்டு. 

Advertisment

ஏனென்றால், அழுதால் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காக அப்படியெல்லாம் சென்று அவருடைய படத்தை நாங்கள் பார்த்ததுண்டு. குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படமாக இருந்த காரணத்தால்தான், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டு நான் பார்த்ததுண்டு. பாக்யராஜ் படத்தை ஒரே ஒரு வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவருடைய திரைப்படங்களை எல்லாம் நாம் கவனித்துப் பார்த்தால், கதைக்காக பாக்யராஜா... பாக்யராஜுக்காக கதையா... என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய மனதை தொடக்கூடிய அளவிற்கு, வெற்றிப் படங்களாக குவித்து, ஒரு வெற்றி நாயகனாக வலம் வந்தவர்  பாக்யராஜ் . 

bhakyaraj-mks-1

50 ஆண்டுகாலம் நிறைவு பெற்றிருக்கக்கூடிய இந்த நேரத்தில், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை, அவர் எப்படி கலைஞரை நினைத்து, என்னை அழைத்திருப்பதாகச் சொன்னாரோ, அதை உணர்ந்து நானும், என்னுடைய சார்பில் அல்ல, தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில், அவரை மனதார வாழ்த்தி, விடைபெறுகிறேன்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினரும்,  நடிகருமான கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ், திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment