Advertisment

“இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை!

mks-iilayaraja

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா இன்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “வரலாற்றில் எத்தனையோ மாமனிதர்கள் ஒரே பிறந்தநாளை கொண்டாடக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், யாரும் இன்னொருவருக்காக தங்களுடைய பிறந்தநாளை மாற்றிக்கொண்டது கிடையாது. ஆனால், இளையராஜா, கலைஞருக்காக தன்னுடைய பிறந்தநாளை ஜூன் 2ஆம் நாளாக மாற்றிக்கொண்டார். அந்த வகையில், உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் இளையராஜா. தமிழாலும் இசையாலும் உயர்ந்தது கலைஞருக்கும் இசைஞானிக்கும் இருந்த நட்பு. 

Advertisment

தனிப்பட்ட முறையில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்றால், என்னுடைய மகள் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார். அந்த நட்போடு, அவர் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போகிறார் என்று செய்தி வந்தவுடனே, அவருடைய வீட்டுக்கு முதல் நபராக சென்று என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இளையராஜாவும் சிம்பொனி சாதனையை நிறைவேற்றிய வெற்றிக் களிப்புடன், என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். இந்த அன்புக்கு நான் என்றைக்கும் கட்டுப்பட்டவன். கடமைப்பட்டவன். அந்த அன்புடன் சொல்கிறேன். இது இளையராஜாவுக்காக நடத்தக்கூடிய பாராட்டு விழா மட்டுமல்ல. உங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றி தெரிவிக்கக்கூடிய விழா. 

இப்படிப்பட்ட இந்த சிறப்பான விழாவில், ஒரு அறிவிப்பு வெளியிடாமல் நான் இருக்க முடியுமா? இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் 'இசைஞானி இளையராஜா' பெயரில் விருது வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அறிவிப்பு மட்டுமல்ல, ஒரு கோரிக்கையும் முன்வைக்கிறேன். இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும், அது சாதாரணம் தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை இந்த மேடையில் நின்று அனைவரின் சார்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கக்கூடிய இளையராஜாவின் ரசிகர்களின் சார்பில் இந்த விழாவில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Award Bharat Ratna Award ilayaraja mk stalin Musician tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe