நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் விழா இன்று (12.12.2025) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு, அவரது  ரசிகர்களும், திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தளப்பதிவில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம். ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisment

மற்றொருபுறம் நடிகர் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, மணிவன்னன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.